ஒரு தேசத்தை ஆள்கிறவன் தன் மக்களின் தேவைகள் குறித்தும், தன் மண்ணின் செழுமை குறித்தும், நீர் நிலைகள் குறித்தும், படைபலம் குறித்தும் எந்த அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறானோ, அதேபோல் அடுத்தவர்களின் தேசத்தைப் பற்றியும் முழுவதுமாக அறிந்து வைத்திருக்கவேண்டியது அவசியம். அந்தத் தேசத்தின் தலைவன் ஆள்- அம்பு சேனையுடன் தன் நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் தொடுத்து, தேசத்தையும் செல்வங்களையும் பெண்களையும் கையகப்படுத்திக்கொண்டால் என்ன செய்வது என்கிற யோசனையில் முன்ஜாக்கிரதையாக இருப்பவனே உண்மையான அரசன்.
கூடவே, மற்ற தேசங்களில் என்னவெல்லாம் முக்கியமானவை என்று கருதப்படுகின்றனவோ, எதுவெல்லாம் சிறப்பானவையாகப் போற்றப்படு கின்றனவோ, அவை நம் நாட்டுக்கும் வந்தால் நன்றாக இருக்குமே என்றும், அந்தத் தேசத்தை நாம் ஆட்சி செய்தால் சிறப்பும் பெருமையும் இன்னும் சேருமே என்றும் நினைத்தார்கள் மன்னர் பெருமக்கள்.
அப்படித்தான், நடுநாடு என்று சொல்லப்படும் தேசத்தை சோழ மன்னன் ஒருவன் படை யெடுத்து வென்றான். மலைகளும் பச்சைப்பசேல் வயல்களுமாக இருந்த அந்தத் தேசத்தில் மழைக் கும் பஞ்சமில்லை; வெயிலுக்கும் குறைவில்லை. பாறைகள் கொண்ட மலைகளும் இருந்தன; மரம் செடி- கொடிகளுடனான மலைகளும் இருந்தன. சேர தேசம், சோழ நாடு, பாண்டிய தேசம் என்று சொல்வதுபோல, விழுப்புரம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் முதலான பகுதிகளை நடுநாடு என்று சொல்வார்கள். அந்தக் காலத்தில், அந்தப் பக்கம் ஆரணியையும் வேலூரையும் பார்த்து வியந்த மன்னர்கள் உண்டு.
முனிவர்களாலும் ஞானிகளாலும் போற்றிக் கொண்டாடப்பட்ட, தபஸ் செய்வதற்கு உகந்த அழகிய வனமாகத் திகழ்ந்த ஆரணிக்கு வந்து, அங்கே சில காலம் தங்கி, தவம் செய்த முனிவர் பெருமக்கள் பலர்.
சோழ தேசத்தை ஆட்சி செய்த மன்னன், நடுநாட்டையும் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தான். ஆரணி மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியைக் கண்டு, அங்கே சூழ்ந்திருந்த அமைதியை உள்வாங்கித் திளைத்தான். ‘இந்த இடம் மிகவும் சாந்நித்தியமான இடம். இங்கே முனிவர்கள் பலர், கடும் தவம் செய்திருக்கிறார்கள். சிவகணங்கள் அரண் போல் இந்த இடத்தைக் காத்து, சிவனருளை நாம் பெறுவதற்கு பேருதவி செய்து வருகின்றன’ என்று அமைச்சர் பெருமக்களும் அந்தணர்களும் சொல்ல… மகிழ்ந்து போனான் மன்னன்.
‘அப்படியென்றால், இங்கே அருமையானதொரு சிவாலயத்தைக் கட்டுங்கள். நம் தேசத்து மக்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ, நம் வாழ்க்கைப் பயணம் எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கெல்லாம் நம் வழித் துணையாக சிவனார் வரட்டும். வழியில் ஏதும் சிக்கல்களோ பிரச்னைகளோ வராமல் இருக்கவும், சரியான வழி எது என்று நமக்குக் காட்டவும் அந்தத் தென்னாடுடைய ஈசன் அருள் புரியட்டும்!’ என்று மன்னன் மனத்துள் வேண்டிக்கொண்டு உத்தரவிட்டான்.
அதன்படி, அந்த வனப்பகுதியின் ஓரிடத்தில், சுபயோக சுபதினமான ஒரு முகூர்த்த நாளில் பூமி பூஜை போடப்பட்டது. அஸ்திவாரம் தோண்டப் பட்டது. கற்கள் இறக்கப்பட்டன. சிற்பிகள் வந்திறங்கினார்கள். மளமளவென அங்கே கோயில் எழும்பியது.
நல்வழிகாட்டும் இறைவன் குடிகொண்டிருக்கிறான் என்பதால், நல்ல விஷயங்களைத் தந்தருளும் ஈசன் வீற்றிருக்கிறான் என்பதால், இந்தக் கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவனுக்கு ஸ்ரீமார்க்க சகாயேஸ்வரர் எனத் திருநாமம் சூட்டப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது ஆரணி. பட்டுக்குப் பெயர் பெற்ற இந்த ஊரில் இருந்து வேலூர் செல்லும் வழியில், சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது அக்ராபாளையம். இந்த ஊரின் மையத்தில், அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீமார்க்க சகாயேஸ்வரர். அம்பாளின் திருநாமம்- ஸ்ரீமரகதாம்பிகை. அவளின் கண்களில் அப்படியொரு மரகத ஒளி மின்னுவதை உணர்ந்து சிலிர்த்தபடி ஆலயத்தை வலம் வந்தால், நம் கண்ணில் நீர் ததும்பித் திரையிடும். ஒருகாலத்தில் மிகப் பிரமாண்டமாக இருந்த கோயில், இன்றைக்குப் பிராகார வலம் வரமுடியாதபடி, முள்ளும் புதரும் முளைத்துக் கிடப்பது கொடுமை.
திருவண்ணாமலையில், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறத் துவங்கிவிட்டால் வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு எனப் பல ஊர்களில் இருந்து மாட்டு வண்டி கட்டிக்கொண்டு புறப்படும் பக்தர்கள், வழியில் உள்ள தலங்களைத் தரிசித்தபடியே திருவண்ணாமலை நோக்கிச் செல்வார்களாம்.
அப்படிச் செல்கிறபோது, ஆரணியை அடுத்த அக்ராபாளையம் சிவாலயத்துக்கும் வந்து, அன்றிரவு அங்கேயே தங்கி, மறுநாள்தான் கிளம்பிச் செல்வார்களாம். அப்போது, ஸ்ரீமார்க்க சகாயேஸ்வரருக்குச் சிறப்பு பூஜைகள் செய்து, ருத்ரம் சொல்லி வழிபாடுகள் நடைபெறும். பிறகு, விடிய விடிய அன்னதானம் நடைபெறும். அதையடுத்து, அந்த பக்தர்கள் திருவண்ணாமலை நோக்கிப் புறப்பட்டுச் செல்வார்கள்.
காலப்போக்கில், கோயிலும் கோயிலுக்குச் செல்லும் வழியும் உருமாறிப் போனதுதான் துயரம். மெள்ள மெள்ள வழிபாடுகளும் குறைந்து, பூஜைகளும் நின்று, திருவீதியுலாக்களும் இல்லாமல் போய்விட்டது என வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர் ஊர்மக்கள். நமக்கான வாழ்க்கைப் பாதையைத் தந்தருளும் சிவனாரின் ஆலயம், சிதைந்தும் புதைந்தும் கிடக்கலாமா? வாழ்க்கைப் பயணத்துக்கு வழித்துணையாக வந்தருளும் ஈசனின் கோயில் இடிந்தும் இருள் படர்ந்தும் இருப்பது முறையா?
தகதகக்கும் கண்களைக் கொண்ட கருணை நாயகி ஸ்ரீமரகதாம்பிகை, நம் தாயைப் போலப் பரிவு காட்டுபவள் ஆயிற்றே! அவள் பசியை ஆற்றும் வகையில் நைவேத்தியமும், அவளின் சிரசில் நறுமணம் கமழ, பூக்களும் இருக்கவேண்டும்தானே! நல்லநாள் பெரியநாள் என்றால், புதிதாக உடுத்திக் கொண்டால்தானே அந்தத் தாயின் மனம் சந்தோஷம் கொள்ளும்! அதற்கு, சிவ-சக்தியின் அடியவர்களாகிய நாம், நம்மால் முடிவதைச் செய்தால்தானே நமக்கும் சிறப்பு; கோயிலுக்கும் மலர்ச்சி! பல வருடங்களாகக் கும்பாபிஷேகமோ திருப்பணியோ காணாமல், சிறப்பு அபிஷேகங்களோ விழாக்களோ இல்லாமல் இருக்கும் ஸ்ரீமார்க்க சகாயேஸ்வரர் கோயில், பழையபடி திருப்பணிகள் நடந்து, கும்பாபிஷேகமும் விமரிசையாக நடைபெற, நாம் ஒவ்வொருவரும் நம் பங்கைச் செலுத்துவோம்.
ஊர் கூடி இழுத்தால்தான் தேர் நகரும். அதேபோல், திருப்பணிக்கு சிவனடியார்களும் அன்பர்களுமாகச் சேர்ந்து கரம் நீட்டுவோம்; அந்தக் கயிலைநாதனின் பேரருளையும் ஸ்ரீமரகதாம்பிகையின் பெருங் கருணையையும் வரமாகப் பெறுவோம்!
கோயிலின் சிறப்பு
பொதுவாகவே கோயிலின் வாசற்படி கிழக்கு நோக்கி அமைந்து இருக்கும்.ஆனால் பரிகார தளங்களில் மட்டும் கோயிலின் வாசற்படி தெற்கு நோக்கி அமைந்து இருக்கும்.இக்கோயிலின் வாசற்படி தெற்கு நோக்கி அமைந்து பரிகாரதலமாக விளங்குகின்றது.குறிப்பாக நீண்ட நாட்களாக திருமண தடை , குழந்தை பேறு இல்லாமை போன்றவற்றிற்கு இத்தலம் சிறந்த பரிகார தலமாக விளங்குகின்றது.இகோயிலில் வழிபட்டு பயன்பெற்றோர் கூறும்போது மெய்சிலிர்கிறது.
எங்கே இருக்கிறது?
திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலையில் இருந்து சுமார் 62 கி.மீ. தொலைவில் உள்ளது ஆரணி. இங்கிருந்து வேலூர் செல்லும் வழியில், சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது அக்ராபாளையம். நமக்கான வாழ்க்கைப் பாதையைக் காட்டி, வழிக்குத் துணையாகவும் இருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீமார்க்க சகாயேஸ்வரர் இங்குதான் கோயில் கொண்டிருக்கிறார்.
8 KM from Arni,
28 KM from Arcot,
32 KM from vellore,
62 KM from Tiruvannamalai,
142 KM from chennai,
With site Map
28 KM from Arcot,
32 KM from vellore,
62 KM from Tiruvannamalai,
142 KM from chennai,
With site Map
Post a Comment